மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்
பொங்கல் என்றவுடன் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற பாடல் வரிகள் மட்டுமே நினைவிற்கு வருகிறது. நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா அம்மா இருவரும் ஆசிரியராக இருந்தாலும், என் அப்பா விவசாயத்தை கவனித்து வந்தார். எங்களிடம் இரண்டு எருதுகள், இரண்டு மூன்று பசு மாடுகள், எருமை மற்றும் ஆண்டு தோறும் தோட்டத்து கருப்பு சாமிக்கு வெட்ட ஒரு கிடாவும் வளர்ப்போம்.
எங்கள் தோட்ட வேலைக்காக ஆட்களை ஆண்டு சம்பளத்திற்கு அப்பா சேர்ப்பார். அதில் மிகவும் என்னோட பாசமாக இருந்தவர் பகவதி அண்ணன். அவர் வேலை ஆள் என்றாலும் அவரை நான் அண்ணா என்றே கூப்பிட்டு பழக்கம். என் அப்பா மிகவும் கோவக்காரர். வாத்தியார் தோட்டம் என்று தான் எங்கள் தோட்டத்தை சொல்வார்கள். அந்த பகவதி அண்ணா என் அப்பாவிடம் மிகவும் அமைதியாகவே இருப்பார். எனக்கு சின்ன வயது முதலே படிப்பில் அவ்வளவு நாட்டம் இல்லை.
எனவே நான் பகவதி அண்ணனுடன் தோட்ட வேலைகள் கற்றுக்கொள்வேன். சோளம் விதைப்பது முதல் நெல், கம்பு, ராகி, வாழை, கரும்பு மற்றும் அனைத்து விதைப்பு முறைகளையும் பகவதி அண்ணண் கற்றுக்கொடுத்தார். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த அண்ணன் நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை எங்கள் தோட்டத்தில் கடுமையாக உழைத்தார். அவர் எங்களுக்காக உழைப்பது பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் எங்கள் பெரியப்பனுக்கு பிடிக்காது. எனவே அவரை பற்றி மோசமாக சொல்லிவிடுவார். என் அப்பாவும் பள்ளியிலிருந்து வந்து அதை நம்பி விடுவார்.
என் அப்பா அவரை என்ன திட்டினாலும் அவருக்கு என்னை விட்டுப்பிரிய மனமில்லாமல் அதை கண்டு கொள்ளமாட்டார். காலையில் மோர் விற்க என்னை அழைத்து செல்வர். அந்தக்காலத்தில், பால் சொசைட்டி எங்கள் ஊரில் இல்லை. எனவே பால் மற்றும் தயிர் விற்க பண்ணை ஆட்கள் செல்லவேண்டும். ஒரு நாள் தயிர் விற்கும் போது சின்ன ஆட்டுக்குட்டியை பார்த்து வேண்டும் என்றேன். அதற்க்கு ஆட்டுக்காரர், அவரை கூனம் பட்டி கௌண்டர் என்று அழைப்பார்கள், 50 ரூபாய் என்றார்.
உடனே பகவதி அண்ணன், கவுண்டரே 10 ரூபா இருக்கு, தயிர் வாங்கி கழிச்சுக்கோங்க என்றார். ராஜா தம்பி ஆசை படுது நான் வாங்கித்தரனும் என்றார். என்னை வாத்தியார் மகன் ராஜா என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். பத்து ரூபாய் பகவதி அண்ணனோடது. எனக்கு விலை கணக்கெல்லாம் தெரியாது. அந்த ஆட்டுக்குட்டி மட்டும் வேண்டும்.
மீதம் நாற்பது ரூபாய்க்கு பகவதி அண்ணன் இரவில் கடலை பறிக்க செல்வார் இல்லை என்றால் வெங்காய தாள் அரிய செல்வார். இது தான் என் பெரியப்பனுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. பாருடா, அவன் ராத்திரியில் வேலைக்கு போயிட்டு பகலில் நீ பள்ளிக்கூடம் போனவுடன், தூங்கிடறான் என்பார்கள். என் அப்பாவும் பகவதி அண்ணனை திட்டுவார். அதற்கெல்லாம் பகவதி அண்ணா வருத்தப் பட மாட்டார் .
பகவதி அண்ணனுடன் தினமும் தோட்டத்தில் ஒரு மாதரி வேலை செய்வர். அவரை கேனன் என்றே எங்கள் ஊரில் அழைப்பர். நானோ கேன தாத்தா என்றுதான் அழைப்பேன். எனக்கு பகவதி அண்ணன் அப்படித்தா நீ கூப்பிடணும்னு சொல்லிக்கொடுத்தார் . கேன தாத்தா பகவதி அண்ணனை விட மிக புத்திசாலி. எனக்கு ஏர் ஓட்டுதல், கலப்பை பூட்டுதல், பரம்படித்தால், நாற்று வீசுதல், நுகம் போட்டு வண்டி பூட்டுதல் எல்லாம் கற்றுக்கொடுத்தார்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே வண்டி ஓட்ட கற்றுக்கொண்டது மிகவும் ஆச்சர்யம். பகவதி அண்ணன் வாங்கிக்கொடுத்த ஆடு, ஒரு நாள் கிடாய் குட்டியை ஈன்றது. என் வாழ்வில் எல்லை இல்லா ஆனந்தம். பள்ளி முடித்து நேராக கட்டுத்தறிக்கு தான் செல்வேன். படிப்பெல்லாம் கிடையாது. ஆட்டுக்கு குட்டியுடன் தான் விளையாட்டு.
அந்த நாளில் பொங்கலும் வந்தது. பொங்கல் என்றாலே, மாட்டுப்பொங்கல் தான். பொங்கல் அன்றே மதியம் பகவதி அண்ணனும் கேணத்ததாவும் வண்டி பூட்டிக்கொண்டு அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வண்டி மற்றும் எருதுகளை கழுவச் சென்றோம். அரக்கன் கோட்டை வாய்க்கால் என்பது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கொடிவேரி அணையில் இருந்து வரும் வாய்க்கால்.
வண்டி மாடு கழுவியாச்சு. விடிய விடிய வண்டிக்கு சாயம் பூசினோம், காலையில், பசுமாடு, எருமை, என் செல்ல ஆட்டுக்குட்டி அனைத்தையும், தோட்டத்து கிணத்து மேட்டில் கழுவினோம். கொம்புக்கு சாயம் பூசினோம். மாட்டுப் பொங்கலுக்கு என் அத்தை வீட்டை என் அப்பா தவறாமல் அழைப்பார். மாமா என் மேல் மிகவும் பாசமானவர். அவர் சாயம் பூசும் வேலைகளை மேற்ப்பார்வை செய்வார் .
பகவதி அண்ணாவின் மனைவி பாக்கிய அக்கா, கேன தாத்தாவின் மகள்கள் குல்லி, இன்ஜி, செவலை மற்றும் அவர் மகன் இடும்பன் அனைவரும் பொங்கல் விழாவில் கலந்து கொள்வார்கள். அவர்களை இப்படித்தான் அழைப்பார்கள். எனவே அதே பெயரில் குறிப்பிடுகிறேன். அந்த பொங்கல் தான் பகவதி அண்ணன் என்னோடிருந்த கடைசிப்பொங்கல். அதன் பின் அவர் எந்த ஊருக்கு போனார் என்று தெரியவில்லை.
கேன தாத்தாவும் நான் 11ம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். என்னை சாமி என்றே கூப்பிடும் குணம் கொண்ட கேன தாத்தா அவர் மகள் மற்றும் மகனையும் அவ்வாறே கூப்பிட பழக்கினார். இன்றும் நான் ஊருக்குப் போனால் அப்படியேதான் கூப்பிடுகிறார்கள். இன்று ஒரு மாடுகூட இல்லை. ஆனால் பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் மாட்டுப்பொங்கல் நாள் நினைவில். பகவதி அண்ணன் மற்றும் கேன தாத்தா சொல்லிக்கொடுத்த விவசாய நுணுக்கங்கள் இன்னும் எனக்குள் இருக்கிறது. எனவே நான் மீண்டும் விவசாயத்திற்கு செல்வேன், மாடு வளர்ப்பேன்.
Comments
Post a Comment