பழனியப்ப தாத்தா எனும் பாலம்

இந்த தலைப்பைப் பார்த்த உடன் நான் ஒரு நபரைப் பற்றி மட்டுமே சொல்லப்ப போகிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல. சரி நான் சொல்ல வரும் தகவலை விவரிக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊர் கொங்கர்பாளையம். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம். இங்கு பலதரப்பட்ட மக்கள் வழ்ந்தாலும் ஒற்றுமை என்பது இருக்கும். 

என் தாத்தாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இந்த ஐந்து பேருக்கும் நண்பனாக இருந்து அவர்களுக்குள் வரும் அனைத்து சண்டை சச்சரவுகளை சமாளித்து ஒற்றுமையை ஏற்படுத்திய பொறுப்பில் இருந்தவரே பழனியப்பா தாத்தா. உலகத்தில் எதார்த்தமான மனிதர்கள் இருந்தார்கள் என்றால் அது அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே. யார் வீட்டிற்கு வந்தாலும் பாகுபாடில்லாமல் நமது குடும்ப உறுப்பினர் போலவே நடந்து கொள்ளும் பாங்கு அவரின் தனித்தன்மை.

அவர் எங்களின் மூன்று தலை முறையோடு பாசமாகவும் பாலமாகவும் இருந்த மாபெரும் மனிதர். அனைவரையும் ஏசாமி என்று அவர் பாசமா அழைக்கும் குரல் இன்னும் என் நினைவில் நின்று கொண்டே இருக்கிறது. பணம் மற்றும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அன்பு மற்றும் மனிதருக்கு மட்டுமே மதிப்பளிக்கும் எங்கள் தாத்தா. அவர் மிகுந்த பணக்காரரோ அல்லது நில சுவனோ அல்ல. சாதாரண வீட்டில் வாழ்ந்த மகான்.

என் அப்பா பெரியப்பா என அனைவரும் அவரது ஒப்புதல் இல்லாமல் புதிய செயல்கள் செய்ததாக எனக்கு தெரியவில்லை. அப்படி செய்தாலும் அவர்கள் அதில் வெற்றி என்பதை கட்டாயமாக பெற்றிருக்க மாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் அவர் ஒரு தீர்க்க தர்சி. என்ன விளைவுகள் வரும் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பதில் வல்லவர்.

நட்புக்கு ஒரு குடும்பம் பரம்பரையாக உதவி செய்யும் என்று இதிகாசம் புராணம் சினிமா போன்றவை சொன்னாலும் உண்மையில் இருப்பது பழனியப்ப தாத்தாவின் குடும்பமே. ஆமாம். அவரது குடும்பத்தில் ஆயா (அவரது மனைவியை நான் அப்படித்தான் கூப்பிடுவேன்) அவரது மகன் ஆறுமுகம் அண்ணா அவரது மருமகள் திலகா அக்கா, மற்றும் அவரது பேத்திகள் உமா மற்றும் நந்தினி வரை அனைவரும் உண்மையான அன்பை கொண்டவர்கள்.

எனது தாத்தாவை நான் பார்த்ததில்லை, ஏனெனில் அவர் நான் பிறப்பதற்கு இரண்டு வருடம் முன்பே இறந்து விட்டார். எனவே எனது தாத்தா மற்றும் அவரை பற்றிய தகவல்களை எனக்கு பழனியப்ப தாத்தாதான் சொல்லியுள்ளார்.  பழனியப்ப தாத்தா நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். அது மிகவும் துயரமான நாளில் ஒன்று. எனக்கு அவரது மறைவு என்பது மிகவும் இழப்பாகவே இருந்தது. ஏனெனில் அவர் என் வயதுடையவரிடமும் நண்பனாகவே இருப்பார்.

அவரின் காலம் முடிந்த பிறகு எங்கள் குடும்பங்களின் பிளவுகளை தடுக்கும் பணியில் ஆறுமுக அண்ணன் இறங்கினார். தாத்தா போராடியது வெறும் ஐந்து குடும்பங்கள். ஆனால் ஆறுமுக அண்ணன் எட்டு குடும்பங்களுடன் போராட வேண்டி இருந்தது. எங்கள் வீடு நல்ல மற்றும் கெட்ட காரியங்களில் தாத்தாவை போலவே இவரும் முன்னின்றே செயல் பட்டார். மனித மனம் குரங்கு. அது தாவுதலை நிறுத்தாது. மேலும் திரும்பி பார்க்காது என்பது போல எங்கள் குடும்பங்களை இணைக்கும் பாலம் சற்று சரிய ஆரம்பித்தது.

ஆறுமுகம் அண்ணனை கேட்டு முடிவெடுக்க யாரும் தயாராக இல்லை. அதனால் இன்று குடும்பங்கள் தனியாக சிதைந்து கொண்டுள்ளது. நல்லவர்க்கு என்றும் நல்ல வாழ்வு என்பது போல யார் ஒதுக்கினால் என்ன இது எனது குடும்ப உறவு என்று ஆறுமுகம் அண்ணா குடும்பம் இன்றும் எங்களுடன் தான் நிற்கிறது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் ஆறுமுகம் அண்ணா சில முற்போக்கான செயல்களில் இறங்கினார்.

அதில் அவர் பெற்ற வெற்றி மிக பெரியது. அந்த வெற்றி என்னவென்றால் என்னை கல்லூரியில் முதல் மாணவனாக்கியது தான். படிப்பு என்பதை லட்சியமே செய்யாமல் திரிந்த என்னை ஒரு சிறந்த பேராசிரியராக்கி அழகு பார்த்த அந்த உள்ளம் ஆறுமுகம் அண்ணா மட்டுமே. நான் பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணுக்கு கோபி கலைக்கல்லூரியில் சுயநிதிப்பிரிவில் தான் இடம் கிடைத்தது. அதுவும் ஆறுமுகம் அண்ணா வாங்கி தந்தது தான். எனக்கு aided இல் படிக்க வேண்டும் என்று ஆசை பட்டேன். இல்லை என்றால் நான் கல்லுரிக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

என்னை என்றுமே அவர் பேரை சொல்லி கூப்பிடாதவர். என்னை விட வயதில் மூத்தவர் என்றாலும் பழனியப்ப தாத்தாவின் வாரிசல்லவா, கண்ணு என்றும் நீங்கள் என்றும் கூப்பிடும் மாண்பு மிகு மனிதர் அவர். ஜூன் 16 காலேஜ். அதுக்குள்ள நாம aided வாங்கிடுவோம் கண்ணு என்று சொன்னதை செய்தும் காட்டியவர். முதலாமாண்டில் ragging நடக்கும் என்பதற்கு ஒரு வருடம் முழுவதும் என்னை அவரது பைக்கில் கூட்டிச்சென்று கல்லூரியில் விட்டு பின் தனது ஆபீஸ் போவார்.

எனக்கு அவர் எடுத்த முயற்சி எந்த விதத்திலும் தோற்க கூடாது என்பதற்காகவே கடுமையாக படித்து நல்ல மார்க் வாங்கினேன். B.Com முடித்த பிறகு M.Com சேர்ந்து முதல் மாணவன் என்ற பெருமையையும் பெற்றேன். அதே கல்லூரியில் எனக்கு வேலையும் வாங்கித்தந்த மாபெரும் உள்ளம் ஆறுமுகம் அண்ணா. நல்ல குடும்பங்கள் சிரமப்பட்டாலும் நன்றாகவே வாழும் என்பதற்கேற்ப அவரது இரண்டு மகள்களும், எனது தங்கைகளுமான உமா மற்றும் நந்தினி மிக நன்றாக படித்தனர். அவர்களின் சந்தேகங்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

உமாவுக்கு கோயம்புத்தூரில் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் நான் நீ அங்கு போக வேண்டாம் கோபியில் படி என்று சொன்னேன். நந்தினி மிகவும் அமைதியான தங்கை. அவள் எங்கு சொன்னாலும் படிப்பேன் என்றால். இன்று இரு தங்கைகளும் அமெரிக்காவில் அருமையான மாப்பிள்ளைகளுடன் வாழ்கிறார்கள். மற்றவர்களை இணைத்து அன்புடன் வாழவைத்தால் ஒரு குடும்பம் எப்படி முன்னேரும் என்பதற்காகவே இந்த கட்டுரை. இது உண்மை நிகழ்வு. கதை அல்ல. சரி, பழனியப்ப தாத்தா யார்னு காட்ட நினைத்தேன் அவர் போட்டோ இல்லை அதனால் அவரின் மகனும் எனது வாழ்க்கையின் ஏணியுமான ஆறுமுகம் அண்ணா இவர் தான்

இவர் கோபி விஸ்வா பீட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். விஷ்வா பீட்ஸ் நிறுவனத்தின் முதலாளி திரு. விஸ்வநாதன் ஐயாவும் ஒரு மாமனிதர். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். அது கல்வியல்ல நல்லதைக் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஆறுமுகம் அண்ணா இன்று சிறப்பான இடத்தில் இருக்கிறார். இந்த பாலம் என்றும் நிலைக்கும். அதற்கு ஒரு தூணாக நான் இருப்பேன். 

Comments

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்