காணாமல் போகுமா விவசாயம்?

இந்தகொரோனா நேரத்தில் இந்த தலைப்பைப் பற்றி எழுதுவது மிகவும் சரியானதாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இன்றைய சூழலில் நமக்கு போதுமானது வெறும் உணவு மட்டுமே. எந்நேரத்திலும் தொற்று வரலாம், உயிர் போகலாம் என எண்ணி அரசே நம்மை வீட்டில் இருக்க உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கி நிற்க, கம்பீரமாக நிமிர்ந்து நிற்பது விவசாயம் தான்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த மானுட வாழ்க்கை முறையை விட இன்றைய வாழ்க்கை பல்வேறு கோணங்களில் மாறுபட்டுள்ளது. பல விளை நிலங்கள் கட்டடங்கள் மற்றும் கட்டிட நிலங்களாகவும் கூறு போடப்பட்டுள்ளது.  நீர் இல்லாமைக்கு காரணம் மரம் வளர்ப்பு இல்லாமை என்று சொல்லியே நம்மை நாம் ஆற்றுப்படுத்துகிறோம்.

பொதுக்கிணறு, பொது ஆழ்துழை இயக்குவிசைக் குழாய், குளம்  போன்ற நீர்நிலைகளை குறைவாகப்  பயன்படுத்தி வந்தநாம், இன்று வீடு தோறும் ஆள்துளைக் கிணறுகள் அமைத்து அதில் தண்ணீரை உறிஞ்சிவிடுகிறோம்.

தண்ணீர் இல்லாமல் வாழமுடியுமா என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் தோன்றுவது புரிகிறது. ஆனால் அதிகமான கட்டுபாடுகள் இல்லாததாலும் பேராசை மிகுந்த எண்ணத்தாலும் நிலத்தைத் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சினால் மரங்களுக்கான நீர் பாதிக்கப்படும். பிறகு நிலத்தடி நீர்க்கால்கள் பாதிக்கப்படுவதால் விவசாய கிணறுகளில் உள்ள ஊற்றுகள் அடைபடும். பின்னர் கிணறுகள் வறட்சியுறும்.

மானுடவியல் கூற்றுப்படி ஆசை என்பது எவ்வளவு பொருள், செல்வம் பெற்றாலும்  நிறைவு பெறாதது. கட்டிடங்கள் விவசாய நிலங்களில் கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் வராவிட்டால், சோற்றுக்காக வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. 

ஏற்கனவே உரம் என்றபெயரிலும் மருந்து என்ற பெயரிலும் நஞ்சைக்கொட்டி மண்ணையும் வளி மண்டலத்தையும் மலடாக்கிவிட்டோம். பல இடங்களில் தண்ணீரை வாயில் வைக்க முடியாத அளவு உவர்ப்பாக்கிவிட்டோம். பல தொழிற்சாலைகள் இதில் பெரும் பங்காற்றி ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளைச் சிதைத்துவிட்டன. 

இன்று விவசாய நிலங்களில் குறிப்பாக நெல்விளையும் நிலங்கள் கட்டிட நிலங்களாக கூறுபோடப்படுகின்றன. இதைத் தொழிலாக செய்யும் தரகர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மக்களின் ஆசையைத் தூண்டி அதைவிற்று நல்ல பணம் பார்த்துவிடுகிறார்கள். 

அந்த நிலத்தை வாங்கியவுடன் ஆள்துளைக் கிணறுகள் அமைத்தல் தான் முதல் பணி. கட்டிடங்கள் கட்டியபின் தங்கள் சாக்கடையை நிலத்தில் விடுகின்றனர். அது நீரில் கலந்து விவசாய கிணறுகளை சாக்கடையாக்கி விவசாயிகளை வெறுமையாக்கி உயிரை மாய்க்கவைக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அடுத்ததலைமுறை அந்நியரிடம் பிச்சை எடுப்பதை யாராலும் தவிரக்கமுடியாது. 

சிந்திப்போம்

முனைவர்.சி.நஞ்சப்பா 
இயற்கை உழவர் 

Comments

  1. எதிர்கால விவசாயம் குறித்த அலசல் அருமை. எளிய நடையில் இயல்பாக எழுதுவது என்பது அனைவருக்கும் அமையாத ஆற்றல். இந்த ஆற்றல் உமக்குக் கிடைத்த வரம். மாதம் இரண்டு பதிவுகளைத் தவறாமல் இடுக.

    ReplyDelete
  2. விவசாயம் இன்றி உணவில்லை ஐயா. உங்கள் ஊக்கம் எனது படைப்பின் ஆக்கம். நன்றி ஐயா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்