இன்றைய கல்விமுறை சரிதானா

எனது மகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை. அவளுடைய பாடத்தில் மாசுபாடு(Pollution), இணையம்  (internet),  கணிணி  (computer) போன்றவற்றை முட்டாள் வல்லுநர் குழு இணைத்துள்ளது. 

தண்ணீர், நிலம், காற்று என்று பிரித்து பார்க்கும் தன்மையே வராத குழந்தைக்கு மாசுபாட்டின் வகைகள், அவைகள் எப்படி, ஏற்படுகிறது, அவற்றை தவிர்க்கும் வழிமுறை என்றெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறது. 

நான் கிராமத்தில் வாழ்ந்தவன், நிலம், நீர், காற்று என பிறப்பிலிருந்தே ஒன்றிணைந்து இருந்ததால் அது பற்றித் தெரியும். ஆனால் எனது குழந்தை  நகரத்தில் இருக்கிறது. காலை வீட்டிலிருந்து பள்ளி மற்றும்  பள்ளியிலிருந்து வீடு, இதுதான் வாழ்க்கை.

அவளிடம் எனது மனைவி ஆங்கிலத்தில் இந்தக் கேள்வியை புத்தகத்தைப் பார்த்துக் கேட்டார் "What is the source of water?", அதற்கு அந்தப் பிஞ்சுக் குழந்தை "Riva water" என்றது. அதற்கு தர்மஅடி விழுந்தது. 

அழுது கொண்டே என்னிடம் அப்பா water Riva companyல் தானே தயாரிக்கிறார்கள் அப்புறம் ஏன் அம்மா என்னை அடிக்கிறார்கள் என்றது என் குழந்தை கண்ணீருடன். 

அவள் வாதம் மிகவும் சரியானது. ஏனெனில் எங்கள் வீட்டில் நாங்கள் அந்த நிறுவனத்தில் இருந்து தான் தண்ணீர் வாங்குகிறோம். 
குழந்தைகள் எப்போதும்  தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தே கற்றுக்கொள்ளும். 

அதைவிடுத்து கண்ணுக்கே தெரியாத ஒன்றைக் குருட்டு மனப்பாடம் செய்து முட்டாள் ஆக்குவது தான் இன்றைய கல்வி. கல்வி வியாபாரத்தில் பலபேர் குழந்தைகளை விற்றுவிடுகிறோம். 

எனது குழந்தை மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவள். எனது குழந்தை மட்டுமல்ல அனைவருமே. ஆனால் இன்று ஒப்பீட்டு (comparision) முறையில் குழந்தைகளை மனநோயாளி ஆக்குகிறோம் என்பது தான் எதார்த்தம். 

கணிணி பற்றியும், இணையம் பற்றியும் இந்த 8 வயதில் படித்து அந்தக் குழந்தை என்ன சாதிக்கப் போகிறது?  ஓடி விளையாடு பாப்பா என்ற பாடல் எழுதிய கவிஞன் வரிகள் நமது பாடத்தில் மறைந்தோடி விட்டது. 

விளையாட்டெல்லாம் இன்று இயந்திரம் (machine) மற்றும் மின்னனுக் கருவிகளோடுதான் (electronic devices). வீட்டுப் பாடம் என்ற ஒன்றைக் கொடுத்து குழந்தையை சாகடிக்கும் பள்ளிகள் தான் பெருகி வருகிறது. 

படிப்பு பள்ளியில் மட்டும் இருக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் பட்டாம் பூச்சிகளாய் ஆடிப்பாடித் திரியவேண்டும். குழந்தைகள் என்று குழந்தைகளாக வாழுமோ இறைவா. அந்த நாளுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் ஒரு தந்தை.

Comments

Post a Comment

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்