உயிரா? மயிரா?

இந்த தலைப்பைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் என் மேல் சற்று வருத்தமோ, ஐயமோ வந்திருக்கும். என்னடா இவன் படித்தவன், பேராசிரியராக இருப்பவன் இப்படி பண்பில்லாமல் தலைப்பை வைத்திருக்கிறான் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இங்கே சொல்லியிருப்பதில் தவறில்லை. அதைத்  திருக்குறளில் திருவள்ளுவரே சொல்கிறார். 
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்"

மயிர் என்பது தான் சரியான தமிழ்ச் சொல். நாம் தான் நாகரிகம் என்ற போர்வையில் சில தமிழ்ச் சொற்களை தவறான வார்த்தைகளுக்குப் பயன் படுத்தி வருகிறோம். சரி நான் சொல்ல வரும் தகவலுக்கு வருகிறேன்.

ஆடிமாதம், அருமையான குளிர்ந்த காற்று, நல்ல அமைதியான இரவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு ஓய்வு. புதன் (18.07.18) இரவு சரியாக 8.30 மணிக்கு நானும் என் மனைவியும் வீட்டின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென யாரோ தான் செல்லும் வண்டியில் இருந்து விழுந்த இரைச்சல். நானும் எனது மனைவியும் ஓடிப்போய் பார்த்தோம். கிட்டத் தட்ட அறுபது வயது இருக்கும் பெரியவரும் அவரது மனைவியும் சாலையில் விழுந்து கிடந்தனர். 

அந்த அம்மாவுக்கு கீழே விழுந்த அடிதான், ஆனால் அந்த முதியவருக்கோ, சுய நினைவு இல்லாமல் போனது. அவரது முன் நெற்றியில் பெரிய காயம். குருதி அவரது உடலெங்கும் வழிந்தோடுகிறது. நாங்கள் அங்கே ஓடும் போது தகவல் தொடர்பு கருவியை (Mobile Phone) எடுக்க வில்லை. சற்று நேரத்திலெல்லாம் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது. எதிரில் இருந்த உணவகத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தனர், நான்கு ஐந்து பேர் அவசர ஊர்திக்கு(ambulance) அழைப்பு விடுத்தனர். மானுடர்க்கு உதவும் எண்ணம் இல்லை என்று பொதுவாக பேசினாலும், இன்னும் அநேகம் பேர் அடுத்தவர்க்கு உதவும் எண்ணம் கொண்டுள்ளனர் என்பது அன்று புரிந்தது. 

அவசர ஊர்தி வருவதற்குள் அவர்களது வீட்டுக்கு அந்த அம்மாவிடம் தொடர்பு எண்ணைக் கேட்டுத் தகவல் அனுப்பி விட்டனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அவசர ஊர்தி வந்து அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றது. அவருக்கு அடி அதிகம் என்றாலும், உயிருக்கு பாதிப்பு இல்லை என்பதை எனது மனைவி உறுதி செய்தார். எனது மனைவி மருத்துவத் துறையில் இருப்பதால், அந்த முதியவரை, காப்பாற்ற அடிப்படை முதலுதவிகளை செய்தார். 

இவ்வளவு விளக்கம் கொடுத்தது சரி, அதற்கான காரணத்தைக் கொஞ்சம் விளக்கப்பா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அவர்கள் வந்த வண்டி விபத்து நேரக் கரணம் 1. சாலை புதுப்பிக்கும் பணி நடை பெறுகிறது, அதனால் சாலையின் நடுவில் சின்ன திட்டு போன்று இருக்கிறது. அதில் அவர் தடுமாறி இருக்கலாம். 2. அவர் வண்டி ஓட்டி வந்த நேரம் இரவு. எதிரில் வரும் பெரிய வண்டிகளின் முகப்பு விளக்குகள், சாலையில் கிடந்த கற்களை மறைத்திருக்கும். அதனால் அதில் இடறி விழுந்திருக்கலாம். 

எது எப்படியோ, அவர் அடி படக்கரணம், அவர் அன்று தலைக் காப்பு அணியாமல் வந்தது தான். இந்த உலகில், விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், நாம் சில முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் மூலம் நம்மை பேராபத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும்.  அன்று அந்த பெரியவர் தலைக் காப்பு அணிந்திருந்தால், ஒரு சொட்டுக் குருதியைக்கூட அவர் அன்று சிந்தும் நிலை வந்திருக்காது. 

இன்று நாம் பலநேரங்களில் இரு சக்கர விசை வண்டிகளை (two wheelers) இயக்கும் பொது, எந்தவித பாதுகாப்புகளை பின்பற்றுவதில்லை என்பது தான் உண்மை. இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, ஒரு மணி நேரத்தில் 17லிருந்த 18 பேர் சாலை விபத்தில் மாண்டு விடுகிறார்கள் எனத் தெறிய வருகிறது. இதில் குறிப்பாக 5 பேர் வரை தலைகாப்பில்லாமல் இரு சக்கர வண்டிகளில் செல்லும் போது தலையில் ஏற்படும் பாதிப்பில் தான் மரணத்தைத் தழுவுகிறார்கள் என்றும் அந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 

நமது உயிர் மிக மிக இன்றிமையாதது. நமக்கு மட்டுமல்ல, நமது குடும்பம் மற்றும் நமது சமூகத்திற்கும் தான். "யானை  வாங்க காசு இருக்கு ஆனால் அங்குசம் வாங்க காசில்லையாம்" என்பது சொல் மொழி. யானை மிகப் பெரிய உருவம் கொண்டது, அதை அடக்க நமக்கு அங்குசம் என்னும் சிறிய இரும்பு போதும். அது போல நாம் பல ஆயிரம் செலவு செய்து வாங்கும் வண்டிகளை ஓட்டி மகிழ வேண்டுமானால் நாம் அங்குசம் என்னும் தலைகாப்பைக் (Helmet) கண்டிப்பாக அணிய வேண்டும்.   நாம் விதிமுறைகள் என்றால் அது மற்றவர்க்கு என்று தான் கருதுகிறோமே தவிர, நமக்கு எனும் எண்ணம் சிறிதும் வருவதில்லை. 

தலைக் காப்பு அணிய வேண்டும் என்று சட்டம் போட்டால், எதோ பெரிய அடக்கும் முறையைத் திணிப்பது போலும், அடிமைகளாக்குவது போலும் சட்டங்களை எதிர்த்துப் போராடுகிறோம். சில பேர் எனக்கு கழுத்து வலி வருகிறது என்கிறோம், சிலரோ எனக்கு மயிர் கழிந்து சொட்டை விழுகிறது என்கிறோம், சிலரோ அதை எப்படி எடுத்துச் செல்வது என்கிறோம். தலைக்காப்பு அணிந்து விட்டால் ஒன்றும் நேராதா என்று சிலர் கேலியாக பேசுவதும் உண்டு. நமக்கு உயிர் போய் விட்டால், மயிரை வைத்து என்ன செய்வது. மயிர் இல்லாமலும் பல காலம் மகிழ்வுடன் வாழலாம், தலையே போய் விட்டால். 

அனைவரும் ஒருநாளில் மாண்டு தான் போகப்போகிறோம். ஆனால் அதற்காக இருக்கும் காலத்தை இழந்து விடக்கூடாது. மகிழ்வுந்தில் (car) செல்லும் போது இருக்கைப் பட்டைகளை (Seat belt) கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் அதை 95 விழுக்காடு (என்னையும் சேர்த்து) அணிவதில்லை என்பதே உண்மை. நாம் வாங்கும் வண்டிகள் எல்லாம் நமது மகிழ்ச்சிக்காகவே. இன்றைய அரக்கர் வேக வளர்ச்சியில் நாம் மிக வேகமாக ஓடுகிறோம். சாலைகளின் சந்திப்பில் உள்ள போக்குவரத்து நெறிமுறை விளக்குகளைக் (traffic signal) கூட மதிப்பதில்லை. 

சற்றே சிந்தனை செய்தால் வாழ்க்கை என்பது ஒன்றும் இல்லாதது அதற்கு எதற்கு இவ்வளவு வேகம் என்பது புரியும். இது அறிவுரைக் கட்டுரை அல்ல, அனைவர் மேல் உள்ள அன்பால் எழுதிய கட்டுரை. விதிமுறைகளை மதிப்போம், மகிழ்வுடன் வாழ்வோம். 

Comments

  1. விழிப்புணர்வை ஏறபடுத்தும் கட்டுரை.
    மிக அருமை.சொல்லிய வித்ம் மிக மிக அருமை.

    ReplyDelete
  2. அருமை சார்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. சட்டத்தை கொண்டு திட்டத்தை வகுக்காமல் சுய ஒழுக்கம் என்பது ஒவ்வொருக்கும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. அனைவரும் தன் தவறை உணரும் வகையில் அமைந்த ஒரு உண்மை பதிவு

    ReplyDelete
  6. விதிமுறையை பின்பற்ற ஒரு உந்துதல் பிறக்கிறது தங்கள் பதிவால்....

    ReplyDelete
  7. மிக அருமையான பதிவு ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்