இடிக்கப்பட்டது ஸ்ரீதேவி தியேட்டர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் தூக்கநாயக்கன்பாளையம் என்னும் ஊரில் ஸ்ரீதேவி தியேட்டர் என்ற ஒரு திரையரங்கம் இருந்தது. கிட்டத்தட்ட 1960களில் இருந்து 2010 -2012 வரை இந்த தியேட்டர் தான் இங்குள்ள மக்களுக்கான மிகப்பெரிய ஒரு பொழுதுபோக்கு.


எனக்கு நினைவு தெரிந்து 1985ல் நான் பார்த்த முதல் படம் முதல் கிட்டத்தட்ட 2000 வரை இந்த தியேட்டரில் அதிக படங்களை நான் பார்த்திருக்கிறேன். தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள கிட்டத்தட்ட 30 கிராமங்களுக்கான ஒரே ஒரு பொழுதுபோக்கு திரையரங்கம் ஸ்ரீதேவி தியேட்டர் மட்டுமே.


நேற்று (19.04.24) எனது சொந்த ஊருக்கு வாக்களிப்பதற்காக இந்த திரையரங்கை கடந்து போகும் போது திரையரங்கம் முன்னாள் வைத்திருந்த மரங்கள் வெட்டப்பட்டிருந்தன மற்றும் திரையரங்கம் இடிக்கப்பட்டு ஒரே மண் குவியலாக காட்சிளித்தது மனதில் ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்தி இந்த பதிவை போட வைத்துள்ளது.


இந்த சினிமா கொட்டகையில் தரை டிக்கெட், பெஞ்ச், பேக்பெஞ்ச், சேர், சோபா என நான்கு வகை இருந்தது.   ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் புது படங்கள் போடப்படும் மற்றும் அதற்குண்டான சினிமா போஸ்டர்கள் எங்கள் ஊர் பகுதிகளில் ஒட்டப்படும். அந்த போஸ்டர் கொண்டு வருபவர் ஒரு வாளியில் பசையும் கொண்டு வருவார்.  அவரே பல நேரங்களில் சிறுசுகளின் ஹீரோ. 


அதிலும் இன்றே கடைசி என்று ஒரு விளம்பரமும் படம் மாற்றும் நாளன்று ஒவ்வொரு சுவரொட்டியிலும் ஒட்டப்பட்டு இருக்கும்.  இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு அது போன்ற ஒரு சினிமா மற்றும் காட்சிகள் பற்றிய புரிதல்களோ  போஸ்டர் ஒட்டுபவர் சைக்கிள் பின்னால் ஓடிய அனுபவமோ ஒரு துளியும் தெரியாது.


50 காசு கொடுத்து தரை டிக்கெட் வாங்கி சினிமா பார்ப்பதற்கு கூட காசு இல்லாமல் சிலர் கூலி வேலை செய்தாவது படம் பார்க்க செல்வார்கள். குறிப்பாக எங்கள் ஊரில் எம்ஜிஆர் படம் சிவாஜி படம் என்றால் களை கட்டிக்கொண்டு ஓடும். அப்படிப்பட்ட ஒரு அருமையான திரையரங்கம். மிகவும் ஏழை மக்கள் ஒரே ஒரு பொழுதுபோக்குக்காக பயன்படுத்தி வந்த திரையரங்கம் இன்று மண் குவியலாக காட்சி அளிக்கிறது.


 மாலை 6:00 மணிக்கு முதல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய first show ஆரம்பிக்க பாடல் போடுவார்கள்.   ரெக்கார்டு போட்டாச்சு சினிமாவுக்கு போறதுக்கு நேரம் ஆச்சு கிளம்புவோம்னு சொல்லி பலபேர் வேகமாக நடப்பதும் சைக்கிள் பிடித்துபோவதும் வழக்கம். முதல் பாட்டா எப்பவுமே சாமி பாட்டு போட்டு தான் ஆரம்பிப்பாங்க. விநாயகனே  என்று தொடங்கக்கூடிய சாமி பாடல் தான் முதல் பாட்டாக ஆரம்பிக்கும்.


முதல் காட்சி முடிந்ததும் இரவு இரண்டாவது காட்சி அதாவது இரண்டாவது ஆட்டம் என்று வட்டார வழக்கில் சொல்வார்கள். இரண்டாவது ஆட்டம் தொடங்கும் போது அதற்கும் மக்கள் காத்திருப்பார்கள்.  சில நேரங்களில் ரிசர்வேஷன் செய்து மட்டுமே படம் பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய கூட்டம் இருக்கும். 


அந்த சினிமா கொட்டகை போக வேண்டுமென்று வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர்ந்து சினிமா பார்த்த பிரம்மாண்ட நினைவுகள் இன்றும் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக எம்ஜிஆர் படங்கள் உரிமைக்குரல் கிட்டத்தட்ட 100 நாட்கள் ஓடியது எனக்கு நினைவிருக்கிறது. சிவாஜி கணேசன் படம்,  ரஜினிகாந்த் முரட்டுக்காளை, அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன் நடித்த படம், ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா,  சந்திரமுகி  போன்ற பல படங்கள் எனக்கு நினைவில் வருகிறது.


எங்கள் தோட்டத்தில் வேலை செய்த ஆட்களுக்கு எனது அப்பா பணம் கொடுத்து படம் பார்க்க அனுப்புவார். சில நேரங்களில் அவர்களோடு சென்று 50 பைசா பெஞ்ச் டிக்கட் வாங்கி படம் பாத்திருக்கிறேன்.  அங்கு மேலாளராக வேலை செய்த அண்ணன் (பெயர் மறந்துவிட்டது) அவர் எனது தந்தையின் நண்பர் எனவே சினிமாவுக்கு போக வேண்டும் என்றால் எனக்கு ஒரு பின் இருக்கை அதாவது சோபாவில் எனக்கு முன்பதிவு செய்து கொடுத்து விடுவார். அதற்கு ருபாய்.2.50 டிக்கட் மற்றும் ரிசர்வேஷன் 1ரூபாய்.  


அங்கு போய் அமர்ந்து வாரம் தவறாமல் படம் பார்த்த நினைவுகள் எல்லாம் இருக்கிறது  நான் சினிமா பார்க்க வேண்டும் என்றால் உடனே என்னை எனது தந்தை கூட்டிச்சென்று விட்டுவிட்டு வீட்டுக்கு போய்விடுவார் மீண்டும் படம் முடியும் நேரம் வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.  அப்படிப்பட்ட ஒரு அருமையான திரையரங்கம் இன்று மண்குவியல் ஆகி கீழே கிடக்கிடப்பதை பார்க்கும்போது மனம் வாடுகிறது.  


மேலும் எங்கள் ஊர் விவசாயம் செழித்த ஊர்.  பண பேராசை பிடித்தவர்களால்  விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவருகிறது. குறிப்பாக எங்களது மூதாதையர் 7தலைமுறைக்கு முன் சேர்த்து வைத்து அடையாளப்படுத்தி வநத பொன் விளையும் நிலத்தை இன்று வீட்டு மனையாக பார்க்கும் போது மனம் வெந்து போகிறது. எனது பெரியப்பா மிகவும் சிரமப்பட்டு வறட்சி காலங்களில் சைக்கிளில் தண்ணீர்  கொண்டு சென்று ஊற்றி 40ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்கள் வெட்டப்பட்டு கீழே சாய்க்கப்பட்டது. 


அங்கு வாழ்ந்த இடங்கள் எங்கள்  7 தலைமுறைகள் வாழ்ந்த இடம் இன்று வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு தார்சாலை இருப்பதை பார்க்கும்போது எனது நெஞ்சம் சுக்குநூறாக நொறுங்கிப் போகிறது. பணம் என்ற ஒன்றுக்காக மனிதன் அடுத்த தலைமுறை பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் கட்டடம் காசு கட்டிடம் காசு என்றே ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிலையைப் பார்த்தால் இது ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுப்போமா என்று தெரியவில்லை. 


அதே ஸ்ரீதேவி தியேட்டர் உரிமையாளர்கள்  கிட்டத்தட்ட  40 ஏக்கர் ஒரே ஒரு வேலியில் வைத்திருந்தார்கள். கொட்டாய்க்காரர் தோட்டம் என்று சொல்லப்பட்ட  அந்த தோட்டத்தில் மிகப்பெரிய ஒரு கல்யாண மண்டபம் கட்டி  அந்த விவசாய நிலத்தை கூறு போட்டுள்ளனர். பணத் தேவைகள் பணவரவு எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மண்ணை தொலைத்துவிட்டு நாம் எதை உண்ணப்போகிறோம் என்று தெரியாமல் ஒரு கூட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறது.


கொரோனா வரை ஒரு சிறிய வேகத்தில் சென்ற மனிதனின் ஆசை கொரோனா முடிந்தபின் 100 மடங்கு பேராசையாக மாறி இன்றைய உலகத்தை விரைவில் அழித்து நொறுக்கும் நிலையில் ஈடுபட்டு வருகிறது. எங்கு நோக்கிலும் பசுமையாக காட்சி அளித்த சாலைகள் இன்று வாகனங்களாக காணப்படுகின்றன.


கொண்டயம்பாளையம் எனும் ஊரின் அருகில் பஞ்ச கருப்பராயன் எனும் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயில் அருகில் கிட்டத்தட்ட ஒரு ஐந்து ஆல மரங்கள் எனக்கு தெரிந்து ஒரு நூறு வருட காலம் இருக்கக்கூடிய ஆலமரங்கள் வெட்டப்பட்டு மொட்டையாக காட்சியளிக்கிறது. அந்த இடத்தை கடந்து போகும் போது குளிர்ச்சியை கொடுக்கும். ஆனால் இன்று காரில் செல்லும்போது கூட ஏசியில் சென்றாலும் அதன் வெப்பத்தை உணருகிற நிலையை கொடுக்கிறது.


இது போன்று  சிறிதுசிறிதாக நாம் இயற்கை விட்டு விலகிச் சென்று நாகரிகம் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய உலகத்தை இழந்து நிற்கப்போவது உறுதியாகிறது. ஸ்ரீதேவி தியேட்டரில் எத்தனையோ மக்கள் படம் பார்த்து தியேட்டர் கட்டியவர்கள் குடும்பத்தை வாழ்த்திவிட்டு சென்றார்கள்.  


இன்று அந்த ஸ்ரீதேவி தியேட்டர் மண்ணோடு மண்ணாகக் கிடப்பதும், சாலையோர மரங்கள் இன்று காணாமல் போனதையும் பார்க்கும் பொழுது விரைவில் இந்த உலகம் அதற்கு உண்டான பெரிய விலையை கொடுக்க போகிறது என்ற வலியுடன் இப்பதிவு.

Comments

Popular posts from this blog

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

மாட்டுப்பொங்கல் என்றாலே பகவதி அண்ணனும், கேன தாத்தாவும் நினைவில்

பழனியப்ப தாத்தா எனும் பாலம்